கடனை எப்போது திருப்பிக் கொடுத்தால் கடன் சுமை குறையும்...? கடன் சுமை குறைய பரிகாரங்கள்...

 வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகள் வரும்போது கடன் சுமை உருவாகிறது.கடனில் சுபக் கடன், அசுப கடன் என்று இரண்டு உள்ளது.நல்ல காரியங்களை நடத்த வாங்கும் கடன் சுபக் கடன் என சொல்லப்படுகிறது. விபத்து, நோய்கள் போன்றவைக்கு வாங்கும் கடன்கள் அசுப கடன் எனப்படுகிறது.அதில் பலர் இன்று கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் எந்த நட்சத்திரத்தில் கடன் திருப்பிக் கொடுத்தால் கடன் சுமை குறையும் என்று இங்கு பார்ப்போம்.

அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும்.

செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும், சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும் போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒருசிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாகக் குறையும்.

எல்லா நாட்களிலும் குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம்.

கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்.

மரணயோகம் உள்ள நாட்களில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

பொதுவான சில பரிகாரங்கள்

குலதெய்வம் கோயிலுக்கு எடைக்கு எடை பச்சை அரிசி தானம் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

சனி பகவானுக்கு வாரம்தோறும் எள் தீபம் ஏற்றி வந்தால், சிறுகச் சிறுக கடன் தொல்லை குறையும்.

உங்கள் ஊரில் உள்ள எல்லைச்சாமிக்கு பட்டாடை சாத்தி பொங்கல் வைத்துப் படைய லிட்டால், கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காலையில் 6 மணிக்குள் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி, சுவாமியை வழிபடுங்கள். அதேபோல் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக விளக்கேற்றி வழிபடலாம்.

இப்படிச் செய்வதுடன், காலை சூரிய உதயத்தின் போதோ, மாலை சூரிய அஸ்தமனத்தின்போதோ தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. தண்ணீரை வீணாக்கக்கூடாது. காரணம் தண்ணீருக்கு அதிபதியான வருணன், குபேரனைப் போலவே செல்வத்துக்கும் அதிபதி என்பதால், தண்ணீரை வீணாக்கக்கூடாது. தானியங்களையும் வீணாக்கக்கூடாது.

Comments