குலசை தசரா திருவிழா விரத விதிமுறைகள்...!

 குலசை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் தசரா விரத விதிமுறைகள் !


    1. 10, 11, 21, 41,48 நாட்கள் என்று அவரவர் மனப் பகுத்திற்கும் உடல் பக்குவத்திற்கும் ஏற்றவாறு விரதம் அனுஷ்டிக்கலாம். சரியான விரதமுறைகளுடன் தூய்மையான பக்தியுடன் 10 நாட்கள் விரதம் இருந்தாலே போதும்.

    2. விரதம் தொடங்கும் முன் நம் வீடு மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும்.

    3. விரதம் தொடங்கும் நாள் அன்று அதிகாலையில் நீராடி நித்ய கர்மானுஷ்டங்களை முடித்து, நம்மை பெற்ற தாய் தந்தையை வணங்கிவிட்டு, பின்னர் எந்தவொரு விக்னமுமின்றி நல்லமுறையில் விரதம் இருக்க, கணபதி மற்றும் நம் குலதெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும்.

    4. அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னரே எழுந்து கடலிலே, புண்ணிய நதிகளிலே, கிணற்றிலே அல்லது நம் வீட்டிலோ நீராட வேண்டும். இதனால் உடலும் மனமும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.

    5. சுத்தமான துவைத்த ஆடைகளையே அணிய வேண்டும். “கூழானாலும் குளித்துக் குடி; கந்தலானாலும் கசக்கி கெட்டு” என்று இருக்க வேண்டும்

    6. நெற்றியில் எப்பொழுதும் அவரவர் வழக்கப்படி திருநீறோ, திருமண்ணோ, சந்தனமோ குங்குமமோ இட்டுக் கொள்ள வேண்டும்

    7. உத்யோகம், பள்ளி, கல்லூரிக்கு என்று செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்துவிட்டு பின்னர், தங்கள் கடமைகளை சரிவர ஆற்றிவிட்டு, மீண்டும் மாலையில் வந்து பூஜைகள் செய்தாலே போதுமானது.

    8. பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதனால் விரதம் கெட்டுவிடும். தேவியின் புராணம் கேட்கலாம் அல்லது மாலை பூஜைக்கு  தேவையானவற்றை ஏற்பாடு செய்யலாம்.

    9. பக்தி ஸ்ரத்தையுடன் எந்தவொரு ஆடம்பரமுமின்றி பூஜிக்க வேண்டும்.

    10. மது, மாமிசம், புகையிலை, சிகரெட் போன்ற போதை வஸ்துகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அம்மனுக்கு மாலையணிந்து விரதம் இருந்துக் கொண்டும், வேடம் அணிந்து கொண்டும் பீடி, சிகரெட், மது அருந்தினால், அதை தட்டிக் கேட்க முத்தாரம்மன் பக்தர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. புனிதத்தைக் காக்கவும்.

    11. வெற்றிலை பாக்கு போடுவது, தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்வுகளை தூண்டக்கூடிய நிகழ்ச்சியை பார்த்தல் அல்லது கேட்டல் கூடாது.

    12. இறப்பு/பிறப்பு, பூப்படைந்த தீட்டில் இருப்பவர்கள் வேஷம் போடக் கூடாது. பொதுவாகவே தீட்டு காலத்தில் நாம் தெய்வ வழிபாடோ, நேர்த்திகடனையோ செய்வதில்லை. தீட்டுக் காலம் கழிந்த பின்னர் விரதம் மேற்க்கொண்டு வேஷம் போடலாம்.

    13. கீழ்கண்ட தீட்டு காலம் கழிந்தால் வேஷம் போடலாம்.

     நம் குடும்பத்தில் குழந்தை பிறந்தால், தாய், தந்தை, பிள்ளைகள், திருமணம் ஆகாத பெண்கள், தாத்தா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப்பாட்டி, தந்தையின் உடன்பிறப்புகள் ஆகிய அத்தனைபேருக்கும் 10 நாட்கள் பிறப்புத் தீட்டு. எனவே, 10 நாட்கள் கழிய வேண்டும்.

     தாயாரோ அல்லது தந்தையாரோ, மனைவியோ, குழந்தைகளோ இறந்திருந்தால், ஒரு வருஷம் கழிய வேண்டும்.

     உடன் பிறந்தவர்கள் இறந்திருந்தால், மூன்று மாதம் கழிய வேண்டும்.

     பங்காளிகளோ அல்லது தாயாதிகளோ இறந்திருந்தால், ஒரு மாதம் கழிய வேண்டும்.

     கருத்தரித்த குழந்தை கலைந்தால் தீட்டு.  கரு எத்தனை மாதமோ அத்தனை நாட்கள் தீட்டு.

     நம் பெண் குழந்தை பூப்படைந்திருந்தாலும் 16 நாட்கள் தீட்டு காக்க வேண்டும்.

    14. இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்க கூடாது. குழந்தை பிறந்த தீட்டு மற்றும் பெண் பூப்படைந்து தீட்டில் இருக்கும் அடுத்த வீட்டிற்கு பிரவேசிக்கக் கூடாது.

    15. சக்தி வடிவமாகவே காட்சி கொடுக்கும் பெண்கள் வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை. ஆசைக்காக போட நினைப்பவர்கள் 10 வயதிற்குள் போட்டுவிட வேண்டும். அதற்கு பின் 50 வயதிற்கு பிறகு தான் போடலாம். விரதம் மட்டும் இருந்து, பூஜைக்கு உதவி செய்தாலே போதும். அவர்களுக்கு ஜகதாம்பிகையின் அருள் கிட்டும்.

    16. வீட்டில் இருக்கும் தாயரை முதலில் வணங்க வேண்டும். அவளே அம்பிகையின் முதல் பிரதிநிதி. அவளிடம் ஆசி பெற்றால் தான் அம்பிகையின் ஆசி நமக்கு கிட்டும்.

    17. தாயாரயோ, மனைவியையோ, சகோதரியையோ அல்லது குழந்தையையோ என எல்லா பெண்களையும் சாட்சாத் அம்பிகையாக மதிக்க வேண்டும்.அவர்களிடம் கடுஞ்சொல் கூறுவதோ, கோபிப்பதோக் கூடாது. பொறுமையாக செயல்பட வேண்டும்.

    18. இரவு 9 மணிக்கு மேலும் பூஜை, திருவிழா என்ற பெயரில் லௌட் ஸ்பீக்கர் வைத்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இடஞ்சல் கொடுப்பது மிகவும் தவறு. மற்றவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்து தான் இன்பமாக இருக்க நினைப்பது அரக்க குணம். அதை அரவே தவிர்க்க வேண்டும். யாருக்கும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற அஹிம்சை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    19. ஸத்ய உரைப்பவர்களிடம் மட்டுமே அன்னைக் குடியிருப்பாள். எனவே, சத்தியமாகிய உண்மையைப் பேச வேண்டும். தர்மவழியில் நடக்க வேண்டும். இவ்விரண்டு மட்டுமே பக்திக்கு அடிப்படையானவைகளாகும். இவற்றைக் கொண்டு வாழ்பவன் இறைவழியில் நடப்பவனாகிறான்.

    20. நமக்கு நியாயமாக இன்னொருத்தனிடமிருந்து வரவேண்டி இருந்தால் அதை நாம் விரும்பினால் தவறில்லை. நாம் அநியாயமாக இன்னொருத்தனுடைய வஸ்துவை நம்முடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதுதான் மிகவும் பாபமாகும்.

    21. உடலும் மனத்தாலும் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.

    22. வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும் பொருட்டும், சுகாதாரத்திற்கும் காலணிகள் (ஷூ) அணியலாம். இதில் குற்றம் எதுவும் இல்லை.

    23. ஐம்புலன் அடக்கம் மிகவும் முக்கியம். அவற்றை அடக்கி, காதால் அவள் நாமத்தையும் கதைகளையும் கேட்டு, மெய்யால் அவளுக்கே தொண்டு செய்து, கண்ணால் அவளின் பல்வேறு அலங்காரகளையும் கண்டு, வாயினால் அவள் நாமத்தையே உச்சரித்து, மூக்கால் அவளின் யாக ஹோமப் புகையை நுகர வேண்டும்.

    24. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சாதாரணமாக சீகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால், வேஷம் போடும் நாளென்று முகச் சவரம் செய்பவர்கள், கவனமாக செய்துவிட்டு பின்னர் ஸ்நானம் செய்தால் போதும். அது ஒன்று ம் தவறில்லை.

    25. தசரா திருவிழாவுக்கு மாலைப் போடுவது, சிவப்பு நிற ஆடை உடுப்பது என்பது சபரிமலையை பார்த்து வந்துள்ள முறையாகும். ஆரம்ப காலத்தில், தசராவிற்கு காப்பு கட்டுவது மட்டுமே ஆலய வழக்கமாக இருந்தது. அதனால் முறையாக காப்பு கட்டி விரதம் இருந்தால் போதும், மாலை போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்காக மாலை அணிய வேண்டாம் என்ற சொல்ல வரவில்லை. அப்படி மாலை அணிவதாக இருந்தால் அதற்கும் சில நியமங்கள் உண்டு. அவற்றையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்

    26. மாலை அணிபவர்கள் கவனத்திற்கு:

     மாலையை தாயார் கையாலோ அல்லது கோவில் பட்டர் கையாலோ அணிந்துக் கொள்ளலாம்.

     பாசிமாலைகளை அணிவதை விட, ருத்திராட்சம், ஸ்படிகம், சந்தனமாலை போன்ற ஜபமாலைகள் அணிவது மேலும் சிறப்பு.

     ஒரு மாலையே போதும். துணை மாலை அவசியமில்லை.

     வேஷம் போடும் பொழுது மாலையைக் கழற்றக் கூடாது.

     தசரா முடிந்தவுடன் மறுநாள் அம்மன் ஆலயத்திற்குள் வந்து இறங்கிய பிறகே காப்பு அறுக்க வேண்டும். பின்பு வீட்டிற்கு வந்து மாலையைக் கழற்றவும். கண்ட இடங்களில் மாலையை கழற்றி வீசாதீர்கள்

    27. ஒரே நிற ஆடை உடுப்பது என்பது கட்டாயம் இல்லை. அவரவர் விருப்பம். தூய்மையான ஆடையை உடுத்த வேண்டும் என்பதே விதிமுறை. எந்த வர்ணத்திலும் ஆடை உடுத்தலாம்.

    28. தாலி, கம்மல், மூக்குத்தி, வளையல், கொலுசு என வேஷம் போடும் முன்னே விரத காலத்தில் போடுவது சம்பிரதாயத்திற்கு விரோதமானது. அது எல்லாம் வெளி வேஷங்கள்.

    29. மனித முடிகளை வேஷத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    30. வேஷம் அணிந்துக் கொண்டு வீடு வீடாக சென்று தர்மம் எடுக்க வேண்டும் என்ற நடைமுறையில் உள்ளது. அதற்காக அனைத்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதில்லை. 7 பேரிடம் பிச்சை எடுத்து தேவிக்கு சமர்ப்பித்தாலே போதும்.

    31. காணிக்கை பணத்தை உண்டியலில் சேர்ப்பதே சரியானது. சிலர், அதை தங்களுடைய சொந்த செலவுகளுக்காக பயன்படுத்துகிறார்கள். அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பலரும் தங்கள் வியாதி, தீவினைகள் எல்லாம் தீரட்டும் என்று சேர்ப்பதை நீங்கள் வாங்கி வைத்திருந்தால், அது உங்களை சேரும். அதனால், எல்லாம் அம்பிகைக்கு சமர்ப்பிப்பதே சிறந்தது.

    32. வேஷம் போட்டுக் கொண்டு சிலர் அடுத்த வீட்டிற்கு செல்கிறார்கள். அப்படி செல்லும் அவர்கள் உள்ளே வர வேண்டும் என்றால் அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறார்கள். இதெல்லாம் தேவையில்லாத புதிய வழக்கங்கள்.

    33. சிலர் ஒரு குழுவாக சென்று, நாங்கள் அன்னதானம் போட போகிறோம் அதற்கு நன்கொடை தாருங்கள் என்று பொதுமக்களை மிகவும் சிரமப்படுத்துகிறார்கள். அன்னதானம் போடுபவர்கள் சொந்த சிலவில் அன்னதானம் போட வேண்டும்.

    34. சில காளி வேடம் அணிந்தவர்கள் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற இறுமாப்புடன் இருக்கிறார்கள். அம்பிகைக்காக வேஷம் போட்டிருப்பவர்கள் அனைவருமே அவள் முன் சமம் தான். அதனால் அதில் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது. உண்மையை சொல்ல போனால் காளி என்ற ரூபம் அம்பிகையின் உக்ர வடிவமே. அதுவும் ஆதிபராசக்தியாய் விளங்கும் முத்தாரம்மனுக்கு இட்ட வேலைகளை செய்யும் பரிவார தேவதை.

    35. குழுவாக இருப்பவர்களில், காளி வேடம் அணிபவர்கள் எல்லா வேலைகளையும் மற்றவர்கள் தான் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

    36. தங்களுக்கு இது எத்தனையாவது மாலை அல்லது எத்தனை முறை வேஷம் போட்டிருக்கிறீர்கள் என்று வினவுவதும், தான் இத்தனை தடவை வேஷம் போட்டிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

    37. கோவிலுக்கு குழுவாக வரும் போது தங்கள் அதிகாரத்தை காட்டுவதும், அராஜகம் செய்வதும், ஆயுதங்களை வைத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதும், தங்கள் சாதியை வெளிப்படுத்தும் விதமாக குறியீடுகளை அணிந்துக் கொள்வதும் முத்தாரம்மன் பக்திக்கே விரோதமானது.

    38. சன்னிதானத்தில் தீச்சட்டி எடுப்பவர்கள் அசம்பாவிதத்து இடம் கொடுக்காமல் குறிப்பிட்டுயிருக்கும் இடத்தில் இறக்கவும். கண்ட இடத்தில் இறக்கி மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காதீர்கள்

    39. கண்ணாடி பாட்டில்களையும், உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்தில் போட்டு, மற்ற பக்தர்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தை செய்ய கூடாது. மேலும் பிளாஸ்டிக் பைகளை/ பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். புனிதமான ஸ்தலத்தை அசுத்தம் செய்யாமல், தூய்மையை பேணிக்காப்போம்!

    40. அம்பிகை வழிபாட்டை ஆவேசத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல் அமைதியாகவும், சாத்வீகமாகவும் இந்த விரதத்தை ஆண்டுதோறும் நாம் கடைபிடித்தால் ஓய்வில்லாமல் வாழும் நமக்கு ஓய்வு, மன அமைதி, ஆத்மபலம், நற்சிந்தனை ஆகியவை நிச்சயம் அம்பிகை அருளால் கிடைக்கும்.
ஓம்சக்தி பராசக்தி

Comments

Post a Comment