101 வருடங்களுக்கு முன்பு கொடி கட்டி பறந்த குலசேகரபட்டினம் லைட் ரயில்
திருச்செந்தூரில் இருந்து திசையன் விளைக்கு ரயில் ஓடியது தெரியுமா.. அந்த ரயிலுக்கு ஜங்சன் குலசேகரபட்டினம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும். இன்று குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு சிறப்பு பெற்று விளங்கிறது. இது ஒரு காலத்தில் மிகப்பெரிய துறைமுகமாக இருந்துள்ளது. அங்குதான் போக்குவரத்துக்காக ரயில் ஓட்டப்பட்டது. இப்போக்குவரத்து ‘குலசேகரப்பட்டினம் லைட் இரயில்வே’ என்று பெயர். இதை டிராம் என்று சொல்வார்கள்.
குலசேகரப்பட்டினத்தில் பாரி கம்பெனியார் நடத்தி வந்த சர்க்கரை தொழிற்சாலை இருந்தது. இதற்கு கே.பி.எம். தொழிற்சாலை என்று பெயர். ஆலைக்கு வேண்டிய பதநீரைக் கொண்டு வர இது பயன்பட்டது. 1927ல் ஆலை மூடப்பட்ட பிறகும்கூட இந்தரெயிலை மட்டும் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு வண்டி அதாவது பெட்டி மட்டும் ஓடும் சிறிய ரெயில் பாதை இது. இந்த ரெயில் பாதைக்கு குலசேகரன்பட்டினம் தான் ஜங்ஷன். திசையன்விளைக்கும்& திருச்செந்தூருக்கும் இடையே அந்த ரெயில் பாதை இருந்தது. பிற்காலத்தில் கருப்பட்டி ஏற்றுமதி செய்வதற்கு இந்த ரெயில் வண்டி பயன்படுத்தப்பட்டது. இந்த வண்டிக்கு இடைப்பட்ட ஊர்களில் நிறுத்தம் உண்டு. யாராவது ஒரு இடத்தில் கருப்பட்டி பெட்டியை வைத்துக்கொண்டு நின்றால் அவர்களை உடனே ரெயிலை நிறுத்தி ஏற்றிக் கொள்வார்கள். பொதுமக்களும் எங்கு நின்றாலும் ரயிலில் ஏற்றிக் கொண்டார்கள்.
இந்த ரயில் கே.பி.எம். துறைமுகம், சென்ட்ரல் ஸ்டேஷன், பிச்சிவிளை, படுக்கப்பத்து, சொக்கன் குடியிருப்பு, தட்டார்மடம், இடைச்சிவிளை ஆகிய இரயில் நிலையங்கள் வழியாகத்தான் திசையன்விளைக்குப் போய்ச்சேரும். இரயில் போக்குவரத்து 1915 முதல் 1940 வைர நடைபெற்று வந்தது. கருப்பக்கட்டி ஏற்றுமதிக்காக இப்பாதை 42 மைல் நீளத்திற்குப் போடப்பட்டது.
டிராம் வண்டிபோல் அமைந்த மிகச்சிறிய அளவில் இப்போக்குவரத்து இயங்கி வந்தது. முதலில் தொழிலாளர்களும் பிறகு பொதுமக்களும் ஏற்றிக்கொள்ளப்பட்டார்கள். பின்னர் நாள்தோறும் மூன்று ‘துரு பாஸஞ்சர்’ வண்டிகள் விடப்பட்டன. குலசேகரப்பட்டினம் சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து கொட்டங்காடு வழியாய் உடன்குடிக்கு ஒரு கிளைப்பாதையும் உண்டு. குலசேகரப்பட்டினம் துறைமுகத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் இயங்கும் ஏற்பாட்டுடன் மணப்பாடு ஊர்க்கு ஒரு கிளைப்பாதையும் இவர்களால் அமைக்கப்பெற்றிருந்தன. இந்த இரயில் போக்குவரத்து இயங்கிய நிலைமையைக் கீழ்க்காணும் விளம்பரத்தால் நாம் அறிந்து கொள்ளலாம்.
திசையன்விளை வெள்ளிக்கிழமை சந்தை ஸ்பெஷல் வண்டி கே.பி.கே.எம். துறைமுகத்திலிருந்து 8 & 5க்கு கிளம்பி திசையன்விளைக்கு 10.30க்குப் போய்ச் சேரும்.
திரும்ப திசையன்விளையை 17&க்கு விட்டு கே.பி.எம். துறைமுகத்திற்கு 19.30க்கு வந்து சேரும்.
என்று எழுதப்பட்டிருந்தது.
குறிப்பு: (1) குலசேகரப்பட்டினம் லைட் இரயில்வே கம்பெனியாருக்கு மேல் கண்ட அட்டவணையில் குறித்த எந்த டிரையினையும் எந்தச் சமயத்தில் யாதொரு காரணமும் சொல்லாமலும் ஜனங்களுக்கு முன்னமே தெரிவிக்காமலும் ரத்து செய்ய சுதந்திரம் உண்டு.
2) உத்ஸவ காலங்களில் ஸ்பெஷல் டிரெயின்கள் தேவையான போது விடப்படும்.
3) ஜனங்கள் ஏறவும் இறங்கவும் இரயில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிற்கும் என்று அந்த விளம்பரப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. நமது ஊரில் டவுண் பஸ் மற்றம் ஷேர் ஆட்டோதான் நினைத்த இடத்தில் நிற்கும். ஆனால் ரயில் பாதை அப்படியல்ல. ஆனால் குறிப்பு 3ல் கூறியபடி ஜனங்கள் ஏறவும் இறங்கவும் இரயில் எந்த இடத்தில் வேண்டுமானாலும்நிற்கும் என்ற குறிப்பைப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. தற்போது இப்படி ஒரு ரயில் இயங்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆரம்ப காலத்தில் சர்க்கரை ஆலைக்கு தேவையான பதநீரைக் கொண்டு வர இது பயன்படுத்துப்பட்டது. 1927&இல் இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் பயணம் செய்ய இந்த ரெயில் பயன்படுத்தப்பட்டது. தற்போது மிக அதிகமான பஸ் வசதி வந்தவுடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது கூட குலசேகரன்பட்டினத்தில் ஞானியார் கல்லறை அருகே செல்லும் பாதை வழியாக கடற்கரைக்குச் சென்றால் அங்கு ரெயில் ஓடியதற்கு அடையாளமாக நிலக்கரிகள் சிதறிக் கிடப்பதை நாம் காணலாம்.
படத்தில் நாம் காண்பது அன்று ஓடிய ரயில் மற்றும் அந்த ரயில் வண்டிக்காக வைக்கப்பட்ட கால அட்டவணை.
தற்போது 101 வருடங்களை தாண்டி விட்டது குலசேகரபட்டினம் லைட் ரயில்வேக்கு.. தண்டவாளங்களையும் எடுத்து விட்டனர். ஆனால் அதன் சுவடுகள் மட்டும் நம் மனதை விட்டு மறையாமல் உள்ளது.
Comments
Post a Comment