குலசேகரப் பட்டினத்தின் உலகம் போற்றும் இந்த பெருமைகள் பற்றி தெரியுமா?

குலசேகரப் பட்டினத்தின் உலகம் போற்றும் இந்த பெருமைகள் பற்றி தெரியுமா...?
தீராத வினைத் தீர்க்கும் முத்தாரம்மன் அமர்ந்துள்ள குலசேகரப்பட்டினம் கோவில் உலகச் சிறப்பு மிக்கதாகும். வெளிநாட்டிலிருந்தும் கூட இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஆனால், இந்த கோவிலின் பெருமைகளைப் பற்றி நம் உள்ளூர் மக்களில் பலருக்கே சரியாக தெரிவதில்லை. அத்தனை பெருமைகளைக் கொண்ட குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு இந்த தசராவை முன்னிட்டு பயணிப்போம் வாருங்கள்.

எங்குள்ளது ?

குலசை, என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, தமிழகத்தில், தென்கோடி தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்துள்ளது. இங்குள்ள ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் திருக்கோயில் பழம் பெருமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

மைசூருக்கு அடுத்து மிகச் சிறப்பான தசரா

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசையில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து வந்து முத்தாரம்மனை வழிபடுவார்கள். குலசை தசராவின் சிறப்பே ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்கப்படுவதில்லை. இதுவே இந்த விழா உலக அளவுக்கு புகழடைய காரணம்.

வேடமிட்டு ஆட்டமாடும் பக்தர்கள் 

பக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர்களில் காணிக்கை பெற்று, அதை தசராவின் 10வது நாளான விஜயதசமியன்று, முத்தாரம்மன் கோயிலில் வந்து சமர்ப்பிப்பதுதான். காளி, சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், அனுமார், சுடலை மாடன், ராஜா, போலீஸ், பெண் என பல நூறு வேடங்களை அணிந்து ஆடி பாடி மகிழ்ந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெறுவர்.

காளிதான் தலைமை 

இந்த வேடங்களில் காளி வேடம் அணிபவர்தான் தலைமை ஏற்று இந்த கூட்டத்தை கூட்டி ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்வார். கிட்டத்தட்ட அவர்தான் குருசாமி எனப்படுகிறார்.நீண்ட சடை முடி அலங்காரம், கையில் திரிசூலம், முகம் முழுக்க செந்நிற வண்ண பூச்சு, கருங்காளியாக இருந்தால் கருமை நிற வண்ண பூச்சு, கழுத்தில் கபால மாலை, அதற்கான தனித்தன்மை வாய்ந்த ஆடைகள் என மிகவும் பொறுமையாக அமர்ந்து வேடமிடுகிறார்கள்.

கோவிலுக்குள் செல்வோம் 

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கன்னியாகுமரி செல்லும் பாதையில் திருச்செந்தூரில் இருந்து 76 கி.மீ. தொலைவில் உள்ளது. தூத்துகுடியில் இருந்து திருச்செந்தூர் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. குலசேகர பட்டினம் என்பது கடற்கரைப் பகுதி ஆகும். இது அந்த ஊரின் பட்டினம் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் சிலர் பட்டணம் என்னும் சொல்லை இங்கு தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. குலசேகரப்பட்டணம் என்பது ஊர் பெயர் இல்லை. பட்டணம் என்பது நகரம் என்று பொருள். குலசேகரப்பட்டினம் என்பதே சரியான பெயர்.

பயண வழிகாட்டி 

திருசெந்தூரிலிருந்து ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. திருச்செந்தூரிலிருந்து தெற்கு பக்கமாக மணப்பாடு கிராமம் நோக்கி செல்லும்போது, அரை மணி நேரத்துக்குள் இந்த ஊரை அடையமுடியும். இந்த ஊர் கன்னியாகுமரியிலிருந்து 78 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 1.30 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

பூசை நேரங்கள் 

காலை நேர பூசை - காலை 8 மணிக்கு 
உச்சி கால பூசை - மதியம் 12 மணிக்கு 
சாயங்கால நேர பூசை - மாலை 5.30 மணிக்கு 
இரவு பூசை - 8.30 மணிக்கு

திருவிழாக்கள் 

பத்து நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் போது மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். ஆடிக் கொடைவிழா இங்கு நடத்தப்படும் அடுத்த பெரிய திருவிழாவாகும். சித்திரை முதல்நாளும் இங்கு சிறப்பாக இருக்கும்.






Comments